அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, பன்னாட்டு அணுசக்தி முகமையுடனான கண்காணிப்பு ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இந்திய அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கோட்டயத்தில் நடைப்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், அமெரிக்காவில் தேர்தல் முடிந்து புதிய அரசியல் சூழல் ஏற்படும் வரை இந்தியா அமெரிக்காவுடன் எந்தவித அணுசக்தி ஒப்பந்தத்திலும் கையெழுத்திடக் கூடாது என்றார்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார் என்றும், அதுவரை, பன்னாட்டு அணுசக்தி முகமையுடனான பேச்சு விரைவில் முடிந்தாலும், பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்ய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அனுமதிக்க மாட்டோம் என்றும் பிரகாஷ் காரத் கூறியுள்ளார். அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிரான இறுதிக் கட்ட போராட்டத்தில் தற்போது உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் சி.முல்போஃர்ட், இந்தியா அணுசக்தி ஒப்பந்தத்தை தற்போது உள்ள அமெரிக்க காங்கிரஸ் பதவிக் காலத்திலேயே நடைமுறைப்படுத்த முன்வராவிட்டால், மீண்டும் இது போன்ற ஒரு வாய்ப்பு இந்தியாவுக்கு, வழங்கப்பட மாட்டாது என்று கூறியதற்கு பதிலடியாகத் தான் இந்த நிலைப்பாட்டை இடதுசாரிகள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய அமெரிக்க அதிபர் தேர்வு செய்யப்பட்ட பின்னர், அவருடன், ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அதிபர்கள் வெளிப்படையான பேச்சு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியள்ள காரத், அமெரிக்காவுடனான இந்தியாவின் எந்தவொரு ஒப்பந்தமும் உலகின் ஏகாதிபத்திய சக்திகளுக்கு துணை போவதாக அமையுமானால் அதனை அனுமதிக்க மாட்டோம் என்றார்.
ஆக்கப்பூர்வ பணிகளுக்கான அணுசக்தி ஒப்பந்தத்தை அமைதியான வழியில் செயல்படுத்த இடதுசாரிகள் தடையாக இருக்க மாட்டார்கள் என்றும் காரத் கூறினார்.