இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவும், அமெரிக்காவுடனான உறவைப் பலப்படுத்தவும் புதிதாக மக்களிடம் சென்று ஆதரவைப் பெற வேண்டிய தேவை ஏற்படவில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போதுச் செயலர் பிரகாஷ் காரத், அமெரிக்காவுடன் இராணுவ ரீதியான உறவை இந்தியா ஏற்படுத்திக் கொள்ளவோ, இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவோ மத்திய அரசு முயன்றால் அதனை இடதுசாரிக் கட்சிகள் தடுக்கும் என்றும், அப்படி ஒருவேளை காங்கிரஸ் கட்சி அதனை செயல்படுத்தியே தீர வேண்டும் என்றால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மக்கள் முன் இந்த பிரச்சனையை வைத்து அதற்குரிய ஆதரவைப் பெற்று பின்பு செயல்படுத்தலாம் என்றும் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, "அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளிடையே அமைக்கப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கைக் குழுவில் அல்லாமல் வெளியில் யாரும் தனிப்பட்ட வகையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க கூடாது. எல்லாப் பிரச்சனைகள் தொடர்பாகவும் முடிவு செய்ய கூட்டு நடவடிக்கைக் குழு உள்ள நிலையில் வெளியில் அது பற்றி யாரும் கருத்து தெரிவிக்க தேவையில்லை" என்றார். மேலும் இந்த கூட்டு நடவடிக்கைக் குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.