மேற்குவங்கத்தில் கோழிக்கறி சாப்பிட்டதால் மயக்கமடைந்த பள்ளி மாணவர்கள் 130 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேற்குவங்க மாநிலத்தில் வேகமாகப் பரவி வந்த பறவைக் காய்ச்சல் நோய் அண்மையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் சத்துணவுடன் கோழிக்கறி சாப்பிட்ட மாணவர்கள் அடுத்தடுத்து மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிம்பூரா என்ற இடத்தில் உள்ள அப்பள்ளியில் ஏற்பட்ட இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும் விரைந்து சென்ற மருத்துவக் குழுவினர், பாதிக்கப்பட்ட மாணவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
சுமார் 20 மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்கள் அனைவரும் முதல் உதவிக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக மிட்னாபூர் மாவட்ட கூடுதல் மருத்துவ அதிகாரி பி.பி.சந்த் தெரிவித்தார்.