Publish Date: Mon, 11 Feb 2008 (15:01 IST)
Updated Date: Mon, 11 Feb 2008 (15:01 IST)
வன்முறையைத் தூண்டிய குற்றத்திற்காக மராட்டிய நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரே, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அபு ஆசிம் ஆஷ்மி ஆகியோர் மீது மும்பை மாநகரக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராஜ் தாக்ரே மீது விக்ரோலி காவல் நிலையத்திலும், அபு ஆசிம் ஆஷ்மி மீது சிவாஜி பார்க் காவல் நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை மாநகரக் காவல் துறைத் துணை ஆணையர் தத்தாத்ரேய கரலே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இரு தலைவர்களின் மீதும் இந்தியத் தண்டனைச் சட்டம் 153, 153(எ), 153(பி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த வாரம், ராஜ் தாக்ரேவின் தூண்டுதலால் மராட்டிய நவ நிர்மான் சேனா கட்சித் தொண்டர்கள் மும்பையில் வசிக்கும் வட இந்தியர்களைத் தாக்கியதுடன், மராட்டிய மொழி அல்லாத படங்கள் ஓடும் திரையரங்குகளையும் தாக்கினர்.
மேலும், மராட்டியத்தில் வசிக்கும் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், தனது நண்பரான சமாஜ்வாடி கட்சித் தலைவர் அமர் சிங்கிற்காக உத்தரப் பிரதேசத்தைப் போற்றுகிறார் என்று கூறி அவரின் வீட்டையும் ராஜ் தாக்ரேயின் ஆட்கள் தாக்கினர்.
இதையடுத்து, ராஜ் தாக்ரேவிற்கு எதிராக சமாஜ்வாடி கட்சியினர் போராட்டத்தைத் துவங்கினர். மும்பை வளர்ச்சி பெற்றதே வட இந்தியர்களால் தான் என்றும், ராஜ் தாக்ரே உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
Webdunia
Publish Date: Mon, 11 Feb 2008 (15:01 IST)
Updated Date: Mon, 11 Feb 2008 (15:01 IST)