அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கவோ, பயமுறுத்தவோ முயற்சிக்க வேண்டாம் என்று அமெரிக்காவை இடதுசாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் டேவிட் சி முல்ஃபோர்ட் கூறியிருந்த கருத்துகளுக்கு பதிலளித்துள்ள இடதுசாரிக் கட்சித் தலைவர்கள், "அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்துமாறு இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கவோ அல்லது பயமுறுத்தவோ அமெரிக்கா முயற்சிக்க முடியாது" என்றனர்.
டெல்லியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா கூறுகையில், "இந்தியா ஒரு இறையாண்மை மிக்க வலிமையான நாடாளுமன்றத்தைக் கொண்ட நாடு. அந்த வகையில் எந்த அழுத்தத்திற்கும் உட்பட்டு முடிவெடுக்க வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு இல்லை" என்றார்.
அமெரிக்காவில் தற்போதுள்ள நாடாளுமன்றத்தின் ஆயுளுக்குள் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை என்றால், மீண்டும் இப்படி ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளும் வாய்ப்பு இந்தியாவிற்கு வழங்கப்படாது என்று டேவிட் சி முல்ஃபோர்ட் கூறியது, "இந்தியாவை நோஞ்சானாக்கி பயமுறுத்தும் செயல்" என்றார் ராஜா.
மேலும், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்வதற்குப் பதிலாக, யுரேனியம் மற்றும் தோரியத்தைப் பயன்படுத்துவதற்கான தனது சொந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது இந்தியாவிற்கு நல்லது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அகில இந்தியப் ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் செயலர் பிஸ்வாஸ் கூறுகையில், "யார் இந்த முல்ஃபோர்ட்? அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவை இவர் ஏன் மிரட்ட வேண்டும்? இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இதை மீறிச் செயல்பட்டால் மத்திய அரசுக்கு நாங்கள் அளித்துவரும் ஆதரவைத் திரும்பப் பெறுவோம்" என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி கூறுகையில், "அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளவோ, அந்நாட்டுடன் ராணுவ ரீதியான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கோ ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை இடதுசாரிகள் அனுமதிக்க மாட்டார்கள்" என்றார்.