சிறுநீரகத் திருட்டுக் கும்பலின் தலைவன் மருத்துவர் அமித் குமாரை இம்மாதம் 22 ஆம் தேதி வரை மத்தியப் புலனாய்வுக் கழகத்தின் (சி.பி.ஐ.) காவலில் வைத்து விசாரிக்க டெல்லி பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்ட மருத்துவர் அமித் குமார் இன்று பலத்த பாதுகாப்புடன் வடக்கு டெல்லியில் உள்ள குலாபி பாக் முதன்மைப் பெருநகரக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவி ஜெயின் வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டான்.
அப்போது, மருத்துவர் அமித் குமாரை இம்மாதம் 22 ஆம் தேதி வரை மத்தியப் புலனாய்வுக் கழகத்தின் காவலில் வைத்து விசாரிப்பதற்கான உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்ற பெயரில் 500-க்கும் மேற்பட்டோரின் சிறுநீரகங்களைத் திருடி பலகோடி ரூபாய்க்கு விற்ற மருத்துவர் அமித் குமாரின் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 326-வது பிரிவு (அபாயகரமான ஆயுதங்களால் காயங்களை ஏற்படுத்துதல், 325-வது பிரிவு (தவறான சிகிச்சை அளித்தல்), 420-வது பிரிவு (மோசடி) மற்றும் 120 பி (சதிதிட்டம்) ஆகிய பிரிவுகளின் கீழ் ம.பு.க. வழக்குப் பதிவு செய்துள்ளது.
டெல்லி அருகில் உள்ள குர்கானைச் சேர்ந்த அமீது குமாரை கடந்த 8 ஆம் தேதி நேபாளத்தில் அந்நாட்டுக் காவல் துறையினர் கைது செய்தனர்.
நேபாள அரசால் நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட அமித் குமாரை, ம.பு.க. அதிகாரிகள் தனி விமானம் மூலம் டெல்லி கொண்டு வந்தனர்