பெங்களூரு அறிவியல் மாநாட்டில் விஞ்ஞானி கொலை, உ.பி. மத்திய ரிசர்வ் காவல் முகாம் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியச் சம்பவங்களில் தொடர்புடைய லஸ்கர்- இ தாயிபா இயக்கத் தீவிரவாதிகள் 6 பேரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு வந்த தீவிரவாதிகள் சிலர் உத்தரப் பிரதேசத்தில் ராம்பூர், லக்னோவில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, இன்று அதிகாலை காவல் துறையினர் ராம்பூர் விரைந்தனர். குறிப்பிட்ட தீவிரவாதிகள் அரசு போக்குவரத்து கழகப் பேருந்தில் சென்று கொண்டிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அந்தப் பேருந்தை தடுத்து நிறுத்திய காவல் துறையினர், அதிலிருந்த 3 பேரை மடக்கி பிடித்தனர்.
சுகைல், அர்ஷத் அலி என்ற பாபா, ஃபாஜீன் ஆகிய அந்த மூவரும் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஸ்கர்-இ தாயிபா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், சுகைல், அர்ஷத் அலி இருவரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், ஃபாஜீன் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
உ.பி. மத்திய ரிசர்வ் காவல் முகாம் மீது நடந்த தாக்குதலில் தொடர்புடைய இவர்கள் 3 பேரும் மும்பைக்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததும், தங்கள் இயக்கத்தின் தலைமையிடம் இருந்து உத்தரவு கிடைத்ததும் மும்பையில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
லக்னோவில் 3 தீவிரவாதிகள் கைது!
இதேபோல, லக்னோவில் காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், பீகாரைச் சேர்ந்த சலாகுதீன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரைச் சேர்ந்த இம்ரான், ஃபாரூக் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், சலாகுதீன் பெங்களூரு விஞ்ஞானிகள் மாநாட்டுத் தாக்குதலிலும் உ.பி. காவல் முகாம் தாக்குதலிலும் முக்கியப் பங்காற்றியவன் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதாகியுள்ள 6 தீவிரவாதிகளிடம் இருந்தும், ஆர்.டி.எக்ஸ், துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் நடந்த அறிவியல் தொழில் நுட்ப மாநாட்டிற்கு வந்தவர்களின் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், டெல்லியை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இத்தாக்குதலுக்குக் காரணம், பாகிஸ்தான் ஆதரவு லஸ்கர்- இ தாயிபா இயக்கத்தினர் என்று தெரியவந்தது.
இதற்கிடையில், கடந்த புத்தாண்டு தினத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் முகாம் (சி.ஆர்.பி.எப்.) மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், முகாம் தகர்க்கப்பட்டதுடன் பாதுகாப்பு படையினர் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.