சபரிமலை அய்யப்பன் கோயிலில் மாசி மாதப் பூஜைக்காக வரும் 12-ம் தேதி நடை திறக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் 17-ம் தேதி வரை பூஜைகள் நடக்கும்.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடையை வரும் பிப். 12-ம் தேதி மாலை 5.30 மணிக்கு மேல்சாந்தி கிருஷ்ணன் நம்பூதிரி திறந்து நெய் விளக்கு ஏற்றி வைப்பார்.
இதையடுத்து, தந்திரி கண்டரரு மகேஸ்வரு அய்யப்பனின் தவ அலங்காரத்தை களைந்து அபிஷேகம் செய்து மாசி மாத பூஜை நடத்த அய்யப்பனிடம் உத்தரவு கேட்பார்.
பின்னர், இரவு கோயில் நடை அடைக்கப்பட்டு, பிப்ரவரி 13-ம் தேதி காலை 5 மணிக்கு நடை திறந்ததும் மாசி மாத பூஜைகள், நெய் அபிஷேகம், அஷ்டாபிஷேகம் துவங்கி நடைபெறும். பின்னர், வழக்கமான பூஜைகளுடன் காலையில் உதயஸ்தமன பூஜை, இரவு படி பூஜை நடைபெறும்.
பிப். 17-ம் தேதி பகலில் அய்யப்பனுக்கு களபாபிஷேகம் நடைபெறும். இரவு அய்யப்பனை தவ அலங்காரம் செய்து, பூஜைகளை நிறைவு செய்து ஹரிவராஸனம் பாடி நடை அடைக்கப்படும்.
மாசி மாத பூஜைக்கு சபரிமலை வரும் பக்தர்களுக்கு பத்தனம்திட்டா, எருமேலி, திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, பந்தளம், செங்கனூரில் இருந்து பம்பைக்கு பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது