இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருக்க விசா நீடிப்பு கிடைக்கும் என்று நம்புவதாக சர்ச்சைக்குரிய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து தொலைபேசி மூலம் அவர் அளித்த பேட்டியில், " இந்தியாவை எனது நாடாக மட்டுமின்றி வீடாகவும் நேசிக்கிறேன். இந்தியாவில்தான் நான் பாதுகாப்பாக இருக்க முடியும். விருந்தினர்களை வரவேற்று உபசரிக்கும் நாடு இந்தியா என்பதில் ஐயமில்லை. எனவே நான் தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்க விசாவை நீடிக்க வேண்டும்" என்றார்.
இந்தியாவில் அவர் தங்கியிருப்பதற்கான அனுமதி இன்னும் எட்டு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் அவர் இவ்வாறு கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தை சேர்ந்த தஸ்லிமா, தனது சர்ச்சைக்குரிய எழுத்துகளால் மதப் பழைமைவாதிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளானார். எனவே வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வந்த அவர் கொல்கட்டாவில் தங்கியிருந்தார். அங்கும் முஸ்லிம் அமைப்புகள் அவருக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. அவரது விசாவை ரத்து செய்ய வேண்டும் என அவ்வமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து கடந்த நவம்பர் 22 ஆம் தேதி கொல்கட்டாவில் இருந்து வெளியேறி புது டெல்லிக்கு வந்து, பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ளார்.