ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் குலாபாக் என்ற இடத்தில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 30 பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இன்று அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவு குறித்துத் தகவல் அறிந்ததும், ராணுவத்தினரும் காவலர்களும் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதுவரை முகமது சஃபி, குஜ்ஜார்பதி ஆகிய 2 ஆண்கள் மற்றும் சபீனா என்ற 12 வயது சிறுமி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களின் உடல்கள் தேடப்பட்டு வருகின்றன.
குலாபாக் பகுதியில் பனிச்சரிவு ஏற்படுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, கடந்த 2005 ஆம் ஆண்டு வால்ட்டென்கோ என்ற இடத்தில் ஏற்பட்ட புயலுடன் கூடிய பனிச்சரிவில் சிக்கி 200 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.