நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கணினி மூலம் இணைக்க மத்திய அரசு ரூ.410 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளது என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் வேங்கடபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள கொல்லி மலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் இத்தகவலை அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுடன் அனைத்து நீதிமன்றங்களையும் கணினி மூலம் இணைக்க மத்திய அரசு ரூ.410 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளது. நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் 7,000 நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர். கிராமங்களுக்கே சென்று மக்களுக்கு நீதி வழங்க நடமாடும் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன" என்றார்.
மேலும், "மக்களுக்கு சுகாதாரம், விவசாயம், மின்சாரம், நீர்ப்பாசனம், தொலைத்தொடர்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பாரத் நிர்மாண் கருத்தொளி இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாலை மேம்பாட்டுக்காக ரூ. 1,74,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன" என்றும் அவர் கூறினார்.