எம்.ஃபில், பி.எச்டி போன்ற உயர் கல்வி பயிலும் பழங்குடியின மாணவர்களுக்கு ராஜிவ் காந்தி தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ரூ.26 கோடி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகார குழுவின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
பல்கலைக் கழக மானியக் குழு வழங்கும் உதவித் தொகை விகிதத்திற்கு ஏற்றார்போல இந்த உதவித் தொகை வழங்கப்படும். தேவைப்படும் போது ஊக்கத் தொகையின் அளவில் மாறுதல் செய்து கொள்ளவும் அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியது. மத்திய அரசின் திட்டமான ராஜிவ் காந்தி தேசிய கல்வி உதவித் திட்டம் 11-வது திட்ட காலத்திலும் அதற்கு பிறகும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
பல்கலைக் கழக மானியக் குழு அங்கீகரித்துள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பயிலும் பழங்குடியின மாணவர்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கக் கூடியது. எம்.ஃபில், பி.எச்டி படிப்புகளை கல்லூரிகளில் சேர்ந்து கற்கும் மாணவ- மாணவியருக்கு மட்டும் இந்த ஊக்கத் தொகை கிடைக்கும். அதிகபட்சமாக ஐந்தாண்டு காலத்திற்கு இந்த உதவி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 667 ஊக்கத் தொகைகள் வழங்கப்படும்.
2007-08-ம் ஆண்டில் இந்த ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 11-வது திட்ட காலத்தில் இந்த சலுகையை வழங்குவதற்காக ரூ.175.985 கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அப்போது 12,079 பழங்குடியின மாணவ- மாணவியர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள்.