இனப்படுகொலையில் ஈடுபட்டு வரும் சிறிலங்க அரசுக்கு மத்திய அரசு உதவக் கூடாது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் பெரியார் திராவிடர் கழகத்தினர் நேரில் வலியுறுத்தினர்.
சிறிலங்க அரசுக்கு ராணுவ உதவிகளை மத்திய அரசு வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கையெழுத்திட்ட படிவங்களை பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் பெரியார் திராவிடர் கழகத்தினர் வழங்கினர்.
தலைநகர் புதுடெல்லியில் ஏ.கே.அந்தோணியின் இல்லத்தில் இன்று காலை 10.15 மணிக்கு நடந்த இந்தச் சந்திப்பில், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, பொதுச் செயலாளர்களான விடுதலை இராசேந்திரன், கோவை கு.இராமகிருட்டிணன், பெரியார் தி.க. தலைமைக் குழு உறுப்பினர் சட்டத்தரணி சா.துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாகச் சிறிலங்க அரசுக்குத் தேவையான ராணுவ உதவிகளை வழங்கும் மத்திய அரசைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் 700 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.