நமது நாட்டில் நடக்கும் தேர்தல்களை முறைகேடின்றி வெளிப்படையாக நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும் உயர் மட்டக் குழுக் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி, தேர்தல் ஆணையர்கள் நவீன் சாவ்லா, எஸ்.ஒய். கரெய்ஷி ஆகியோர் தலைமையில் தலைநகர் டெல்லியில் இன்று நடக்கவுள்ள இக்கூட்டத்தில், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை மூலமாகப் போலி வாக்காளர்களை அடையாளம் கண்டு நீக்குவது தொடர்பாக விவாதிக்கப்படும்.
அதேபோல, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், இந்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் ஆகியவையும் ஆய்வு செய்யப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
நமது நாட்டில், 513 மக்களவைத் தொகுதிகள், 3,726 சட்டப் பேரவைத் தொகுதிகள் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. இதில், ஜார்கண்ட், அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில், மாற்றியமைக்கப்பட்ட தொகுதிகளின்படி வாக்குப் பதிவை நடத்த குடியரசு தலைவர் ஆணையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.