ஆண்கள் திருமணம் செய்வதற்கான வயதை 21 லிருந்து 18 ஆகக் குறைக்கலாம் என்று மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தலைமையில் அமைக்கப்பட்ட சட்ட ஆணையம், மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜிடம் புதன்கிழமை சமர்ப்பித்த பரிந்துரையில், "ஆண்களுக்குத் திருமண வயது 21 என்றும் பெண்களுக்கு திருமண வயது 18 என்றும் தற்போது சட்டம் உள்ளது. இரு பாலாருக்கும் திருமண வயதில் இந்த வித்தியாசம் ஏன் இருக்க வேண்டும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக காரணம் ஏதுமில்லை" என்று கூறியுள்ளது.
"திருமணத்தை கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும். 16 வயது முதல் 18 வயதுக்குள் திருமணம் நடந்தால், கணவன், மனைவி இருவரது சம்மதத்துடன் அத்திருமணத்தை சட்டப்படி ரத்து செய்யலாம்" என்றும் சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக அதன் உறுப்பினர் கீர்த்தி உப்பல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"திருமணம் ஆன பெண்ணாக இருந்தாலும் உடல் உறவுக்கு ஏற்ற வயது 15 வயது என்று இருப்பதை 16 வயதாக மாற்ற வேண்டும். இந்த பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டால், 16 வயதுக்கு உட்பட்ட பெண்ணின் சம்மதத்துடன் உறவு வைக்கும் ஆண்களுக்கு தண்டனை கிடைக்கும். 16 வயதுக்குட்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து உறவு கொண்டாலும் கணவன் மீது சட்டப்படி வழக்குப் பதியலாம். 15 வயதுக்குட்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து உடல் உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டம் 375 வது பிரிவில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமணம் ரத்தானாலும், சட்டப்படி செல்லாத திருமணத்தை செய்திருந்தாலும் அதனால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும். பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஜீவனாம்ச சட்டம் அவர்களுக்கும் பொருந்துமாறு செய்ய வேண்டும்" என்று கீர்த்தி உப்பல் கூறினார்.
2006-ல் இயற்றப்பட்ட குழந்தைத் திருமணத் தடை சட்டத்தில், 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு திருமணம் நடந்தால் அத்திருமணம் செல்லாது என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் 15 வயதுக்கு உட்பட்டவருடன் உடல் உறவு வைத்துக் கொள்வது குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 வது பிரிவில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.