ஆழ்நிலை தியானத்தை உலகம் முழுவதும் பரப்பிய மகரிஷி மகேஷ் யோகி தனது 91 வயதில் மரணம் அடைந்தார்.
தனது கடந்த காலத்தில் ஸ்பெயினில் தங்கியிருந்த வேதாந்த மகரிஷி மகேஷ் யோகி கடந்த ஒரு மாதமாக உடல் நிலை சரியில்லாமல் கோமாவில் இருந்தார். அவரின் உயிர் நேற்று இரவு 7 மணியளவில் அமைதியாகப் பிரிந்தது.
"இது ஒரு அமைதியான மரணம். மனதைக் கட்டுப்படுத்தி ஆழ்நிலை தியானத்தின் விதிமுறைகளைக் கடைபிடிக்க உலகிற்குக் கற்றுத் தந்த மகரிஷ் மகேஷ் யோகி மறைந்தாலும், அவரின் ஆழ்நிலை தியானப் பயிற்சிக்கு இறப்பே கிடையாது. வாழ்க்கை என்பது ஒரு வரம். மனிதனாகப் பிறப்பதற்கு மகிழ்ச்சி அடைய வேண்டும். இதுதான் அவரின் தத்துவமாக இருந்தது" என்று ஸ்பெயினில் உள்ள மகரிஷியின் தலைமை அலுவலகச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் பிறந்த மகரிஷி மகேஷ் யோகி தியானத்தின் அனைத்து நிலைகளையும் கற்று உணர்ந்தார். கடந்த 1959 ஆம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்காவிற்குச் சென்று ஆழ்நிலை தியானம் குறித்த விளக்கங்களை அந்நாட்டு மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அதன் பிறகு இந்தியா திருப்பி தியானப் பள்ளிகளைத் துவங்கினார்.
கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை உலகின் பல பகுதிகளில் 70 வகையான தியான நிலைகளை போதித்தார். உலகம் எங்கும் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானத்தை பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.