பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நாளை கூடவிருக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து அமைச்சர்கள் குழு வழங்கியுள்ள பரிந்துரைகள் எதுவும் விவாதிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பெட்ரோல் விலை உயர்வு குறித்து அமைச்சர்கள் குழு வழங்கியுள்ள பரிந்துரைகளின் மீது மத்திய அமைச்சரவை இறுதி முடிவை எடுக்கும். ஆனால், நாளை நடக்கவிருக்கும் கூட்டத்தில் அதுபற்றி விவாதிக்கப்பட மாட்டாது. இந்த மாதத்திற்குள் நிச்சயம் முடிவெடுக்கப்படும்" என்று பெட்ரோலியத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவிடம் கேட்டதற்கு, "பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து தற்போது என்னால் எதுவும் கூற முடியாது" என்றார்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்த வேண்டும் என்று பெட்ரோலிய நிறுவனங்கள் விடுத்துள்ள கோரிக்கை பற்றி முடிவெடுப்பதற்காக, மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு பலமுறை கூடி விவாதித்தது. இருந்தாலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரையும், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.1 முதல் ரூ.2 வரையும் உயர்த்துவதற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதேநேரத்தில், பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் ஆகியோர் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மேலும், விலை உயர்வுக்குப் பதிலாக வரிகளைக் குறைப்பது போன்ற மாற்று வழிகள் சிலவற்றை அமைச்சர்கள் முரளி தியோரா, பிரணாப் முகர்ஜி ஆகியோர் பரிந்துரைத்தனர். ஆனால், இதற்கு மற்ற அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இவ்வாறு குழப்பமான சூழல் நிலவியதால், விலை உயர்வு குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை மத்திய அமைச்சரவையிடம் ஒப்படைப்பதாக அமைச்சர்கள் குழு அறிவித்தது.
இதற்கிடையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளும் பெட்ரோல் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிவிதிப்பை முறைப்படுத்துவதன் மூலம், அவற்றின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதைத் தவிர்த்து, பொது மக்களின் மீது சுமையை ஏற்றுவதைச் சகிக்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி இன்று எச்சரித்தார்.