டெல்லியில் நிலவி வரும் கடும் மூடுபனி மற்றும் குறைவான வெளிச்சத்தால், இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து முற்றுலுமாக தடைபட்டுள்ளது.
டெல்லியில் இன்று காலை 8.30 மணிவரை 2.7 மி.மி., மழை பதிவாகியுள்ளது. கடும் பனிமூட்டம் கடந்த ஒரு மாதத்தில் பெரும்பலான விமானங்கள் காலதாமதமாக புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் காரணமாகியுள்ளது.
விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், "இன்று காலை 6.15 மணியில் இருந்து திடீரென பனிப்பொழிவு அதிகமாகி உள்ளது. இதனால் விமான ஓடுதளத்தில் 100 மீட்டர் தொலைவு கூட பார்க்க முடியவில்லை. சில விமானங்கள் நவீனப் பார்வைத் தொழில் நுட்ப (CAT-3B) முறையை பயன்படுத்திப் புறப்பட்டன. இவைதவிர வேறு எந்த விமானமும் தரையிறக்கப்படவும் இல்லை, புறப்படவும் இல்லை. இதனால் 50 விமானங்கள் தாமதமாகியுள்ளன" என்றனர்.
மேலும், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழைப் பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.