Publish Date: Wed, 06 Feb 2008 (17:36 IST)
Updated Date: Wed, 06 Feb 2008 (17:35 IST)
சிறிலங்காவுக்கு ஆயுத உதவிகளை வழங்கிவருவதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்றம் முன்பு பெரியார் திராவிடக் கழகத்தினர் இன்று ஆர்ப்பட்டம் நடத்தினர்.
தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பு இன்று காலை 11.30 மணிக்கு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்து! இனப் படுகொலைக்குத் துணை போகாதே! ஆயுத உதவி வழங்காதே என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளுடன் 1,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் நடந்த பகுதி முழுவதும், ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்க அரசின் இனவெறித் தாக்குதல்களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டு இருந்தன. மேலும் இதைத் தத்ரூபமாகச் சித்தரிக்கும் வகையில் குழந்தைகள், பெண்கள் ஆகியோர் காயக்கட்டுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
சிறிலங்காவிற்கு மத்திய அரசு ஆயுத உதவிகளை வழங்கக் கூடாது என்று 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கையெழுத்திட்டுள்ள படிவங்களை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று மாலை 4 மணிக்கு நேரில் வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.