மேற்கு வங்கத்தில் மாநில அரசைக் கண்டித்து ஃபார்வர்ட் பிளாக் கட்சியினர் நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
கொல்கட்டா, ஹவுரா உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் ஃபார்வர்ட் பிளாக் கட்சித் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முழு அடைப்புப் போராட்டத்தின் போது கலவரத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்ட 166 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று காவல் துறை அதிகாரி ராஜ் கனோஜியா தெரிவித்தார்.
கொல்கட்டா, குச்பிகார், தின்ஹதா உள்ளிட்ட இரயில் நிலையங்களில் இரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வெளி மாநிலப் பயணிகள் கடுமையாக அவதியுற்றனர்.
மேற்கு வங்க மாநிலம் குச்பிகார் மாவட்டம், தின்ஹதா பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் நடத்த ஃபார்வார்ட் பிளாக் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி போராட்டத்தில் ஈடுபட்ட கட்சித் தொண்டர்கள் திடீரென வன்முறையில் இறங்கியதால், கலவரம் ஏற்பட்டது.
காவல் துறையினர் வீசிய கண்ணீர் புகை குண்டுகளுக்கு அடங்காத கலவரக் கூட்டம், வாகனங்களைத் தீயிட்டு கொளுத்தியது. இதனால், கலவரத்தை அடக்கக் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஃபார்வர்ட் பிளாக் ஆதரவாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு ஃபார்வர்ட் பிளாக் அழைப்பு விடுத்தது.