பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தூண்டுதலின் பேரில் இந்தியாவில் ஊடுருவியுள்ள தற்கொலைப் படை பயங்கரவாதிகளால், பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானியின் உயிருக்கு ஆபத்து உள்ளதென்றும், இதனால், "சங்கல்ப யாத்திரையை' மேற்கொள்ள வேண்டாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மத்திய அரசின் இந்த எச்சரிக்கையால், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான எல்.கே.அத்வானியின் யாத்திரை ரத்தாகும் கட்டாயம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
அத்வானி மட்டுமல்லாமல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் கொலைசெய்ய சர்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே அத்வானிக்கும், மோடிக்கும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு பா.ஜ.க. ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தது.
யாத்திரைத் திட்டத்தில் மாறுதல்
இதற்கிடையில், அத்வானியின் சங்கல்ப யாத்திரை திட்டத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. ஜபல்பூரிலிருந்து மத்தியப் பிரதேசத்துக்கு சங்கல்ப யாத்திரையை புதன்கிழமை தொடங்க அத்வானி திட்டமிட்டிருந்தார். தற்கொலைப் படையினர் தாக்குதல் அபாயம் காரணமாக அத்வானியின் யாத்திரை திட்டத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் தெரிவித்தார்.
ஜபல்பூரில் புதன்கிழமை நடைபெறவிருக்கும் பேரணியில் அத்வானி உரையாற்றுவார். ஆனால் பிப்ரவரி 10 ஆம் தேதி ராம்பூரில் நடைபெறவிருந்த பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒரிசா, ஆந்திரம், கர்நாடகம், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஹரியானா ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளவிருந்த யாத்திரை ரத்தாகக் கூடும் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்த ஆண்டு மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறுகளை பொது மக்களுக்கு எடுத்துரைக்க சங்கல்ப யாத்திரையை நாடு முழுவதும் மேற்கொள்ள, தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பிரதமர் பதவிக்குரிய வேட்பாளரான அத்வானி திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.