''புதுவையில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கு அதிகாரிகளே தடையாக உள்ளனர்'' என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி குற்றம்சாற்றி உள்ளார்.
புதுவைக்கான திட்டங்களில் ரூ.10 கோடிக்கு கீழ் உள்ளவற்றை மட்டுமே மாநில அரசு செயல்படுத்த வேண்டுமென்றும், அதற்கு மேல் உள்ள திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்றும் தலைமை செயலாளர் ராகேஷ் பிகாரி புதிய உத்தரவை பிறப்பித்தார். திட்டங்களைச் செயல்படுத்த அமைக்கப்பட்டிருந்த உயர் மட்டக் குழுவையும் கலைத்துள்ளார்.
இந்நிலையில், புதுச்சேரி விவசாயத் தொழிலாளர் தொழிற்சங்கத் தலைவர்கள் உருவாக்க பயிற்சி முகாமில் பேசிய முதல்வர் ரங்கசாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குத் திட்டங்களைச் செயல்படுத்தும் அதிகாரம் இல்லை என்பது மிகப்பெரிய குறை என்றார்.
மேலும், "பெரும்பாலும் ஒரு சட்டப் பேரவை கூட்டத் தொடரில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன்பு நிறைவேற்றி வருகிறோம். இதனால் புதுச்சேரி மாநிலம் நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. அதனால்தான் இங்கு தனி நபர் வருமானம் ரூ.65 ஆயிரம் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.
இந்தச் சூழலில் ரூ.10 கோடி மதிப்பிலான திட்டங்களை மட்டுமே மாநில அரசு செயல்படுத்தலாம் என்றும் அதற்கு மேற்பட்ட தொகைக்கான திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்றும் தலைமை செயலாளர் கூறியிருப்பது அரசின் திட்டங்களுக்கு தடையாக இருக்கும். இது மாநிலஅரசின் முன்னேற்றத்தை பாதிக்கும்.
புதிதாக வரும் உயரதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கூறுவது மாநில முன்னேற்றத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், மக்களையும் பாதிக்கும். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்" என்றார் முதல்வர் ரங்கசாமி.