புதுச்சேரியில் அமைச்சரவைக்குள்ளும், புதுவை காங்கிரஸ் கட்சிக்குள்ளும், ஏற்பட்ட குழப்பத்தை தவிர்த்து அரசை நல்ல முறையில் நடத்துவதற்கு தேர்தல் வாக்குறுதி அமலாக்க குழு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட மூன்று சுயேட்சைகள் ஆதரவுடன் கடந்த 2006ஆம் ஆண்டு புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றார்.
அரசு சொந்தமாக மருத்துவ கல்லூரி தொடங்கும் வரையில் பதவியேற்ற நாள் முதல் அமைச்சரவையின் செயல்பாடுகள் சுமுகமாக நடந்து வந்த நிலையில், கடந்த நான்கு முறை சட்டபேரவைத் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த தனது சொந்த தொகுதியான தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள கதிர்காமம் என்னுமிடத்தில் காமராஜர் பெயரில் மருத்துவ கல்லூரி தொடங்கினார் முதல்வர் ரங்கசாமி.
இந்த கல்லூரி திட்டத்திற்கு முதலமைச்சர் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதையடுத்து ஆளுநர் தலைமையில் இந்த கல்லூரி விவகாரம் தொடர்பாக திட்டகுழு கூட்டத்தின் விவாதம் நடைபெற்றது.
முதலமைச்சர் ரங்கசாமியின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் வைத்தியலிங்கம், வல்சராஜ், கந்தசாமி, மல்லடி கிருஷ்ண ராவ், ஷாஜகான் ஆகியோர் கடந்த ஜனவரி 26ஆம் தேதி ஆளுநர் முகுத் மிதியை சந்தித்து இது தொடர்பான தகவல்களை அளித்தனர்.
இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதன் செயற்குழுவின் சிறப்பழைப்பாளர் அருண்குமார் தலைமையில் முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் விதமாக கட்சியின் தேர்தல் அறிக்கையை செயல்படுத்தும் குழு ஒன்றை அமைத்துள்ளது.