பரவிவரும் பயங்கரவாதம், மோதல்களின் பிற வடிவங்கள் போன்றவற்றைக் கண்டறிந்து அவற்றிற்கு எதிராக வலிமையான முறையில் போராடும் வகையில், தங்களது பாதுகாப்புக் கட்டமைப்புகள், உளவு அமைப்புகளிடம் உள்ள பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களை ஆசிய நாடுகள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று துவங்கிய ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பேசிய மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, நமது ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள பொதுவான சவால்களுக்கு பொதுவான தீர்வுகளை ஒன்றுபட்டுக் காண வேண்டும் என்றார்.
பரவிவரும் பயங்கரவாதம், மோதல்களின் பிற வடிவங்கள் போன்றவற்றைக் கண்டறிந்து அவற்றிற்கு எதிராகத் தடுப்புச் சுவர் அமைக்கும் பிணைப்பு என்பது நமது அரசமைப்புகளுக்கு இடையில் மட்டுமின்றி நமது பாதுகாப்பு அமைப்புகளுக்குள்ளும் உள்ளதென்று நிரூபிக்க வேண்டும் என்றார் அவர்.
உலகில் 343 அரசு சாரா பயங்கரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன, அதில் 187 அமைப்புகள் ஆசியாவில் உள்ளன என்பதைக் குறிப்பிட்ட அந்தோணி, எல்லைகளின்றிச் செயல்படும் இந்த அமைப்புகள் தங்கள் தகவல்களைப் பரப்புவதற்கும் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய நவீனத் தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று தெரிவித்தார்.