கடற்புலிகளைப் பாதுகாக்கும் வகையில் இந்திய மீனவர்கள் செயல்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய அரசிடம் சிறிலங்கக் கடற்படை புகார் அளித்துள்ளது.
இதுகுறித்து சிறிலங்க கடற்படை செய்தித் தொடர்பாளர் டி.கே.பி.தசநாயக கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தலைமன்னாரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் நேற்றிரவு இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான 400 நாட்டுப் படகுகள் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. அதில் ஒரு படகு மணலில் சிக்கிக் கொண்டதைப் போலத் தோற்றம் அளித்தது.
இதைக் கண்ட சிறிலங்கக் கடற்படையின் 2 ஐ.பி.சி. (நீரிலும் நிலத்திலும் செல்லும்) படகுகள், குறிப்பிட்ட படகைக் காப்பாற்றுவதற்காக விரைந்து சென்றன. அப்போது, இந்திய மீனவர்களின் படகுகளில் இருந்த சிலர் எங்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதில், ஐ.பி.சி. படகுகளில் ஒன்று சேதமடைந்தது.
சிறிலங்கக் கடற்படையினரைத் தாக்குவதற்கு இந்திய மீனவர்களின் இருப்பை கடற்புலிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். நேற்று தாக்குதல் நடந்த இடத்தில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக அத்துமீறி எல்லை தாண்டி வருவதால் ஏராளமான சிக்கல்கள் ஏற்படுகிறது. இதுகுறித்துக் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் சிறிலங்கக் கடற்படைத் தலைமையகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டும் இந்திய மீனவர்களால் எங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உருவாகிறது. எங்கள் படகுகளும் கப்பல்களும் தாக்குதலுக்கு இலக்காகும் அபாயம் உள்ளது. ஏராளமான இந்திய மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எங்களால் திருப்பித் தாக்க முடிவதில்லை.
இதனால், இந்திய மீனவர்கள் தங்கள் செய்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு தசநாயக தெரிவித்தார்.