நாடுகளுக்கு இடையிலான எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச நாடுகள் ஒன்றுபட வேண்டுமென்றும், தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் பயங்கரவாதச் சதிச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு அரசிற்கும் உள்ளதென்றும் இந்தியா கூறியுள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று பத்தாவது ஆசியப் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மேற்கண்ட வேண்டுகோளை விடுத்ததுடன், ஒட்டுமொத்த உலகிற்கும் பயங்கரவாதம் ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளதென்று கவலை தெரிவித்தார்.
மேலும், "உலகிலேயே அதிகமான பயங்கரவாதக் குழுக்களுக்குத் தாயகமாக ஆசியா விளங்குகிறது. இந்தியா கடந்த 1980 முதல் இந்தச் சிக்கலைச் சந்தித்து வருகிறது. முதலில் பஞ்சாபிலும், பின்னர் ஜம்மு- காஷ்மீரிலும், தற்போது நாட்டின் பிறபகுதிகளுக்கும் பயங்கரவாதம் பரவியுள்ளது.
தங்களுக்குத் தேவையான ஆட்களைத் தேர்வு செய்வதற்கும், அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கும், தாக்குதல்களை ஒருங்கிணைப்பதற்கும் பலவீனமான அரசுகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இதனால், தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் எல்லா அரசுகளுக்கும் உள்ளது.
தேவைப்படும்பொழுது பயன்படுத்திக் கொள்ளவும், பிறகு திரும்பப் பெற்றுக் கொள்வதற்கும் பயங்கரவாதம் ஒரு அரசியல் கருவியோ, ராணுவமோ அல்ல. ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இதுபோன்ற சூழ்நிலை சாதாரணமாகக் காணப்படுவது கவலை அளிக்கிறது.
பயங்கரவாதிகளின் கூடாரமாக உள்ள ஆஃப்கானிஸ்தானில் நிலையான அரசு உருவாக வேண்டியது அவசியம். தற்போதுள்ள அரசு தங்களின் அதிகார எல்லையை நாடு முழுவதும் விரிவுபடுத்த முயற்சி எடுத்து, அதன்மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும்" என்றார் பிரணாப் முகர்ஜி.