இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமானது உலக அரங்கில் இந்தியாவின் நிலைபாட்டிற்கு ஒரு தன்னிகரற்ற அடையாளமாக விளங்குகிறது என்று அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் ரோனென் சென் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிப் பேசுகையில், "இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பெரும்பாலான ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், இருதரப்புக்கும் இடையில் உருவாகும் புதிய உறவுகளுக்கும், அதன்மூலம் உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைக்கும் புதிய அங்கீகாரத்திற்கும் தன்னிகரற்ற அடையாளமாக விளங்கும்" என்றார்.
மேலும், "ஐரோப்பா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் சிக்கல்கள் நீடிப்பது வழக்கம். இந்த அணுசக்தி ஒப்பந்தமும் அதைப்போன்ற ஒன்றுதான். கடந்தகால ராணுவ நடவடிக்கைகளைப் பார்க்கையில் இந்தியாவும், அமெரிக்காவும் ராணுவக் கூட்டாளிகளாக இருக்க முடியாது, தவிர பாதுகாப்புப் பங்குதாரர்களாக அழைக்கப்பட வேண்டும்" என்றார் சென்.