இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை யார் மீதும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திணிக்காது என்று மத்திய அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார்.
மத்திய ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணியின் முக்கிய உறுப்பினரான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் - மத்திய அமைச்சருமான சரத்பவார் தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியின் போது, இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை யார் மீதும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திணிக்காது என்று கூறியுள்ளார்.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அரசு நியாயமான நடவடிக்கை எடுத்து வருகிறதா என்று கேட்டதற்கு, இப்பிரச்சனைகளில் எங்களுடைய கூட்டணிக் கட்சியினரிடையே ஒத்த கருத்தை உருவாக்குவது தொடர்பாக பேசி வருகின்றோம் என்றும், ஆனால் ஒத்தக் கருத்தை எட்ட இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல நாடாளுமன்றத்திலும் எங்கள் கருத்துக்கு முழு ஒத்துழைப்பு அதாவது பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். எங்கள் அறிவுக்கு உட்பட்டு நியாயமான பாதையிலேயே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யார் மீதும் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை திணிக்கமாட்டோம் என்றும், அதேநேரத்தில் நாட்டிற்கு ஸ்திரத் தன்மையையும், வளர்ச்சியையும் தற்போதைய நிலையில் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாற்று எரிசக்தியாக உள்ள இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நல்லதுதான் என்றும், தற்போதைய சூழ்நிலையில் சுற்றுச் சூழலுக்கு உகந்த எரிசக்தி நாட்டிற்குத் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் நாட்டை அது மேலும் பலப்படுத்தும் என்றும், அதேசமயத்தில் இதனை நிறைவேற்றுவதற்காக நாட்டின் ஸ்திரத் தன்மையையும், பொருளாதாரத்தையும் விலைக் கொடுக்க இயலாது என்றும் பவார் கூறியுள்ளார். இடதுசாரிகளின் எதிர்ப்பு என்பது அவர்களுடைய சிந்தனைப்படி நேர்மையானது தான் என்றும் தெரிவித்துள்ளார்.
அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக பன்னாட்டு அணுசக்தி முகமையை மத்திய அரசு அணுகியுள்ள நேரத்தில் சரத்பவாரின் கருத்துக்கள் இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.