வரவிருக்கும் 2008 -09 நிதியாண்டுக்கான இரயில்வே நிதிநிலை அறிக்கை மக்கள் நலன் சார்ந்ததாகவும், கண்ணீரை வர வழைக்காததாகவும் இருக்கும் என்று மத்திய இரயில்வேத் துறை இணையமைச்சர் ஆர். வேலு தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று திருவனந்தபுரம் - மும்பை வழித்தடத்தில் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட 'கரிஃப் ரத' பயணிகள் இரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசிய அவர், "இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள இரயில்வே நிதிநிலை அறிக்கை மக்களின் நட்பு சார்ந்ததாக இருக்கும் என்றும், மக்களுக்கு கண்ணீரை வரவழைக்காததாக இருக்கும். பயணிகளின் வசதிகளும், இரயில்வே உள்கட்டமைப்பும் தான் இரயில்வே திட்டங்களில் முதன்மையானது" என்றார்.
இந்த நிதியாண்டிலும் இரயில்வே உபரித் தொகை, அதன் இலக்கான ரூ. 22,500 கோடி வருவாயை எட்டும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர், அவ்வாறு வரும் தொகை உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும், பயணிகள் வசதியை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
"நடப்பு 2007 -08 ஆம் நிதியாண்டில் சரக்கு போக்குவரத்து ஏழு கோடி டன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இரயில்வே தன்னுடைய இழப்புகளை எல்லாம், சரக்கு போக்குவரத்து வருவாயை பல்வேறு ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகள் மூலம் பெருக்கியது வழியாக எதிர்க் கொண்டுள்ளது.
இரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 60 இரயில் நிலையங்கள் பன்னாட்டு தரத்திற்கு மேம்படுத்தப்பட உள்ளன. இரயில்களில் உள்ள கழிவறைகளை சுத்தமாக பராமரிக்கும் நடைமுறை புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாற்றப்படும்" என்றார் அமைச்சர் வேலு.