நமது கப்பற் படையின் இரண்டாவது மிகப் பெரிய கப்பலான ஐ.என்.எஸ் ஜலசேவா நடுக்கடலில் போர்ப் பயிற்சில் ஈடுபட்டிருந்த போது நிகழ்ந்த விபத்தில் கடற்படை வீரர்கள் 5 பேர் பலியானதுடன் 3 பேர் படுகாயமடைந்தனர்.
நமது கடற்படை வீரர்கள் வங்காள விரிகுடா கடற்பகுதியில், விசாகப்பட்டினம் - அந்தமான் இடையே `ஐ.என்.எஸ். ஜல சேவா' என்ற புதிய கப்பலில் போர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, நடுக்கடலில் நடந்த விபத்தில், 5 மாலுமிகள் பலியானார்கள்.
எரிவாயுக் கசிவினால் விபத்து ஏற்பட்டதாகவும், காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழு ஒன்று உடனடியாக அந்தமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கடற்படை செய்திக்குறிப்புத் தெரிவிக்கிறது.
தேவைப்பட்டால் காயமடைந்தவர்கள் விமானத்தின் மூலம் விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பலியானவர்களின் குடும்பத்திற்கு ராணுவ அமைச்சர் அந்தோணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு இது குறித்த உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தியக் கப்பற் படையின் இரண்டாவது மிகப் பெரிய கப்பலான ஜலசேவா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்டது.