மத்திய அரசு அமைக்க உள்ள 6,000 நடமாடும் கிராம நீதிமன்றங்களுக்கு உரிய அதிகாரத்தை அதிகரிப்பதுடன் அதனை மேம்படுத்த திட்டமிட்டு வருவதாக மத்திய சட்டத் துறை அமைச்சர் ஹெச்.ஆர். பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள கிராம மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்கும் வகையில் ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் ஒரு நடமாடும் நீதிமன்றத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த நீதிமன்றங்கள் சிவில், குற்ற வழக்குகளுடன், சமரசம் செய்தல், தகராறை தீர்த்துவைத்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்ள தெவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ஹெச்.ஆர்.பரத்வாஜ் டெல்லியில் இன்று மாநில சட்ட அமைச்சர்கள், சட்டத்துறைச் செயலாளர்கள், உயர்நீதிமன்ற பதிவாளர்களுக்கான மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசும்போது தெரிவித்தார்.
வழக்குகளை குறைப்பதும், உரிய - தரமான நீதியை கிராமப்புற மக்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு சேர்ப்பதுதான் அரசின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார். வழக்குகளை குறைப்பதற்காக இங்கு நாம் கூடவில்லை என்று தெரிவித்த அவர், விரைந்து நீதியை வழங்கவும், நாட்டின் நீதிமன்றங்களில் தேங்கியுள்ள 2 கோடியே 75 லட்சம் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பரத்வாஜ் கூறியுள்ளார்.
கிராம நியாலயா சட்ட முன்வடிவு 2007 -ல் கூறப்பட்டுள்ளது போல கிராம நடமாடும் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் பட்சத்தில், தற்போதைய நிலையில் இருந்து நீதித்துறையின் அதிகாரங்கள் பரவலாக்கப்படும் என்றும், இந்த அதிகாரப் பரவல் மாவட்டங்கள், வட்டங்கள் வரை விரிவுப்படுத்தப்படும் எனவும் பரத்வாஜ் கூறியுள்ளார்.
கிராமப் புறத்தில் வாழும் ஏழை மனிதன் நீதியைப் பெறுவதற்காக மாவட்டத்தின் மையப்பகுதிக்குச் செல்லவேண்டிய அவசியம்தான் என்ன என்றும், அவனுடைய வீட்டுவாயிலில் ஏன் நீதியை வழங்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பிய அமைச்சர் பரத்வாஜ், நமது நாட்டை உருவாக்கிய தலைவர்களின் கனவுகளை நினைவு கூர்ந்தார்.
சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் ஆன நிலையிலும் கூட ஏழையின் வாயிலில் சென்று நீதியை வழங்க இயலாத அவல நிலையில் தான் இருக்கிறோம். இது மிகப்பெரிய சோகமாகும் என்று அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். மேலும் கிராமப் புறங்களில் நீதித்துறையில் மற்றொரு அடுக்கு நீதியமைப்பு முறையை உருவாக்குவதையும் அவர் நியாயப்படுத்தி உள்ளார்.
கிராமப் புற நீதிமன்றங்களை உருவாக்கும் பணியில் வெற்றிபெற மாநில சட்ட அமைச்சர்கள், சட்டத் துறை செயலாளர்களின் ஆதரவைபரத்வாஜ் கோரியுள்ளார். இந்த நடமாடும் நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிக்கும் போது, மாநில உயர் நீதி மன்றங்கள் வகுத்து கொடுத்த நடைமுறைகளின் அடிப்படையில் மாநில அரசுகள் நீதிபதிகளை நியமித்துக் கொள்ளலாம் என்று மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.