நாட்டில் முதன் முறையாக எர்ணாகுளம் மண்டல இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் முதல் காப்புறுதி தவணைப் பணம் பெறுவது மூலம் ரூ.1,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
நடப்பாண்டு ஜனவரி 31 ஆம் தேதி முடிய உள்ள காலத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் எர்ணாகுளம் மண்டலம் முதல் காப்புறுதித் தவணைப் பண வருவாயாக ரூ.1,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. நாட்டிலேயே இந்த அளவுக்கு வருவாய் ஈட்டிய முதல் மண்டலம் என்ற பெருமையை எர்ணாகுளம் இந்திய ஆயுள் காப்பீட்டு மண்டலம் பெற்றுள்ளது.
வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தனது இலக்கான ரூ.1,500 கோடியை எட்ட முடியும் என்று நம்பவுதாக அம்மண்டலத்தின் மூத்த மண்டல மேலாளர் அணில்குமார் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள 105 மண்டலங்களிலும் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருவதாகவும், இந்த மொத்த வருவாயும் 4,42,000 இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் காப்புறுதி திட்டத்தின் மூலம் வந்ததுதான் என்றும் அணில்குமார் தெரிவித்துள்ளார்.
90 விழுக்காடு வருவாய் யு.எல்.ஐ.பி. வணிகத்தின் மூலம் கிடைத்துள்ளதாகவும், முதல் காப்புறுதி தவணைப் பணம் பெற்றதில் இரினாலிகுடா ரூ. 77 கோடியும், குன்னம்குளம் ரூ. 73 கோடியும், திருச்சூர் 70 கோடி ரூபாயும் வருவாய் ஈட்டியுள்ளன என்று கூறியுள்ளார். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக வர்த்தகத்தில் கேரள மாநிலம் மிகப்பெரிய அளவுக்கு பங்கு வகிக்கின்றது.
இதற்கு காரணம் அதிகப்படியான கேரள மக்கள் அயல் நாடுகளில் வாழ்ந்து வரும் நிலையிலும், இம்மாநிலத்தில் உள்ள 28 லட்சம் பேர் இந்திய ஆயுள் காப்பீட்டு பத்திரங்களை வாங்கியுளளது தான் என்று அவர் கூறியுள்ளார். கேரளாவில் 3 இந்திய ஆயுள் காப்பீட்டு வருவாய் மண்டலங்களும், 24 கிளைகளும், 11 செயற்கைகொள் அலுவலகங்களும், 1200 ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.