பெரும்பாலான இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.20 -க்கும் குறைவாகவே கடந்த 2005 -06 ஆம் நிதியாண்டிற்க்கு உட்பட்ட காலத்தில் செலவு செய்துள்ளதாக தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு சராசரியாக நபர் ஒருவருக்கு கிராமப் புறங்களில் ரூ.12 -க்கும் குறைவாகவே கடந்த 2005 -06 ஆம் நிதியாண்டில் செலவு செய்துள்ளனர். இதேக் காலத்தில் நகர்புற மக்களில் 22 விழுக்காட்டினர் ஒருவருக்கு ரூ.19 செலவு செய்துள்ளனர்.
தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் நடத்திய 2005 -06 நிதியாண்டுக் காலத்தில் கிராமப் புறப் பகுதிகளில் உள்ள மக்களின் சராசரி வாங்கும் திறன் தொடர்பான ஆய்வில், கிராமப்புற மக்கள் 53 பைசாவும், நகர்புற மக்கள் 40 பைசாவும் உணவுப் பொருட்களுக்காக செலவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் நாட்டில் உள்ள குடும்பங்களின் செலவினங்கள் தொடர்பாக நடத்திய ஆய்வில், கடந்த 2005 -06 ஆம் நிதியாண்டுக்கு உட்பட்ட காலத்தில் மாதாந்திர தனி நபர் பொருட்களை வாங்கும் அளவு சத்தீஸ்கர் மாநிலத்தில் ரூ.429, ஒரிஸாவில் ரூ.460, பீகாரில் ரூ.465, ஜார்க்கண்டில் ரூ.469, மத்திய பிரதேசத்தில் 487 ரூபாயாக மிகக் குறைந்துள்ளது.
இதேப்போல மாதாந்திர தனி நபர் செலவு அளவானது கிராமப் புறங்களில் உள்ள 19 விழுக்காட்டினர் ரூ.365 வும், நகர்புறத்தில் உள்ள 22 விழுக்காட்டினர் 522 ரூபாயும் செலவு செய்துள்ளனர். நாட்டில் உள்ள மிகப் பெரிய மாநிலங்களாக கருதப்படுபவைகளில் 7 மாநிலங்களின் நகர்புறங்களில் தனி நபர் ஒருவர் உணவுக்காக ஒரு மாதத்திற்கு செலவிட்ட சராசரி தொகை ரூ. 451-500 தான்.
அதேப்போன்று 13 மாநிலங்களில் இந்த செலவுத் தொகை ரூ.251 - 400 தான் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தானியங்களை பொறுத்த வகையில் இந்த காலத்தில் கிராமப்புற மக்களில் தன நபர் சராசரி அளவு 11.9 கிலோவாகவும், நகர்புறங்களில் 9.8 கிலோ தானியமாகவும் இருந்துள்ளது.
இது தவிர மற்ற வாழ்நிலைகளிலும் கிராமப்புற மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டே உள்ளனர். கிராமப்புற மக்களில் 19 விழுக்காட்டினர் ஒலைக் குடிசைகளில் தான் வாழ்ந்து வருகின்றனர். 50 விழுக்காட்டினர் மேல்தளம் உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர்.
நகர் புறங்களைப் பொறுத்த வகையில் சமையல் எரிவாயு பயன்படுத்துவோர் 40 முதல் 75 விழுக்காட்டினராக அனைத்து பெரிய மாநிலங்களில் உள்ளனர். அதே நேரத்தில் 74 விழுக்காடு கிராமப்புற மக்கள் விறகுகளையும், சுள்ளிகளையும் தான் இன்றும் தங்கள் எரிபொருள் தேவைக்காக பெரிதும் நம்பியுள்ளனர்.
வளர்ச்சி கிராமப் புறங்களில் இலேசாக தலைக்காட்டத் தொடங்கியுள்ளது. கிராமப் புறங்களில் 56 விழுக்காடு வீடுகளில் மின்சார வசதி உள்ளது. ஆனால் இன்னும் 42 விழுக்காடு குடும்பங்கள் தங்கள் வீட்டில் விளக்கேற்ற மண்ணெண்ணையைத் தான் இன்னும் நம்பியுள்ளனர்.
நகர்புற மக்களின் செலவுச் செய்யும் திறனில் மாநிலங்களைப் பொறுத்தமட்டில் கேரள மாநில நகர்புற மக்கள் மாதம் ஒன்றுக்கு 1,566 ரூபாயும், அடுத்தபடியாக பஞ்சாப் மாநில மக்கள் 1,520 ரூபாயும் செலவு செய்கின்றனர்.
இந்த ஆய்வுக்காக உணவுத் தொடர்பான 148 வகைகளும், எரிபொருள் தொடர்பாக 13 வகைகளும், ஆடை, படுக்கை, மிதியடிகள் என 28 வகைகளும், மருத்துவம், கல்வி தொடர்பான 18 வகைகளும், உடையாத் தன்மையுள்ள 52 பொருட்கள், மற்றும் 85 வகையான வீட்டு உபயோகப் பொருட்கள் பற்றிய விவரங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசங்கள், நிறு மாநிலங்கள் என தனியாக ஆய்வு மேற்கொள்ளப்பட வில்லை என்றும், அவற்றை குழுவாக இணைத்து கணக்கிட்டதாகவும் அதிவ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக், கார்கில் மாவட்டங்கள், நாகாலாந்து, அந்தமான்- நிகோபர் தீவுகளின் கிராமங்கள் தவிர நாடு முழுவதும் உள்ள 6 லட்சம் கிராமங்களில் 4,750 கிராமங்களிலும், 5,120 நகர்புறங்களில் உள்ள 39,436 வீடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டதாகவும் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.