மிக்-27 இரக விமானம் மேற்கு வங்க மாநிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு சிறுவன் படுகாயமடைந்தான். இந்த விபத்தில் விமானி உயிர்தப்பினார்.
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள சின்சூலா தேயிலைத் தோட்டம் அருகில் பிற்பகல் 12.40 மணிக்கு தரைத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் மிக்-27 இரக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். தேயிலைத் தோட்டத்தில் இருந்த சிறுவன் ஒருவன் இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளான் என்று அம்மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் எஸ். திருபுராரி கூறியுள்ளார்.
விமானி பாராசூட் உதவியுடன் உயிர் தப்பியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விமான விபத்து குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமானப்படை செய்தித் தொடர்பாளர், விபத்துக்கு உள்ளான விமானம், வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஹசிமாரா விமானத்தளத்தில் இருந்து 10.2 கி.மீட்டர் தொலைவில் விபத்துக்குஉள்ளானதாக தெரிவித்துள்ளார்.
விமானம் தரையில் மோதிய போது சிதறிய கல்தாக்கி சிறுவன் காயமடைந்து இருக்கலாம் என்று திரிபுராரி கூறியுள்ளார். இந்த ஆண்டில் இந்திய விமானப் படை விமானம் விபத்துக்கு உள்ளாவது இது முதல் முறையாகும். இந்த விபத்து குறித்து விசாரிக்க விமானப்படை விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.
கடந்த 1980 ஆம் ஆண்டிக்கு பிறகு விமானப் படையில் சேர்க்கப் பட்ட மிக்-27 இரக விமானங்கள், மற்ற மிக் இரக விமானங்களை விட பாதுகாப்பானது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் மிக் -27 இரக விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாவது இதுவே முதல் தடவையாகும்.