வருடத்தில் நாடாளுமன்றம் 100 நாட்களும், மாநில சட்டப் பேரவைகள் 60 நாட்களும் குறைந்தபட்சம் நடைப்பெற வேண்டும் என்று 7 மாநில சட்டப் பேரவைகளின் அவைத் தலைவர்கள் அடங்கிய குழு தெரிவித்துள்ளது.
பேரவைத் தலைவர்கள் அவையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்ட மக்களவைத் துணைத் தலைவர் தலைமையிலான இந்த துணைக் குழுவில் 7 மாநிலங்களின் சட்டப் பேரவைத் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். இரண்டு நாட்கள் நடைப்பெறும் இந்த துணைக்குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் தொடங்கியுள்ளது.
இக்குழுவின் தலைவரும், மக்களவைத் துணைத் தலைவருமான சரண்ஜித் சிங் அத்வால் செய்தியாளர்களிடம் பேசும் போது, நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆண்டுக்கு 100 நாட்களும், மாநில சட்டப் பேரவைகளின் கூட்டத் தொடர் ஆண்டுக்கு 60 நாட்களும் நடத்த வேண்டும் என்று இக்குழு அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல இதுதொடர்பாக சட்டப்பூர்வமான கருத்துரை ஒன்றையும் தாக்கல் செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவையின் நடவடிக்கைகள் தொலைக் காட்சிகளில் ஒளிப் பரப்பப்படும் போது தங்களின் பேச்சுகள் வருவதில்லை என்ற பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்து குறித்தும், இதற்கு குறைந்த பட்சம் நேரம் ஒதுக்குவது தொடர்பாகவும், பொது நலப் பிரச்சனைகளுக்கு அதிக நேரம் ஒதுக்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதல் அமைச்சர்களுக்கு உள்ளதைப் போன்று பேரவைத் தலைவர்களுக்கும் செயல் அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும், இந்த அலுவலகங்கள் நடுநிலையோடும், சுதந்திரமாகவும் செயல்படும் நிலையில் அமைக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்ய உள்ளதாகவும் சரண்ஜித்சிங் அட்வால் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைச் செயலர், மாநில தலைமைச் செயலரை போல நடத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.