சேதுசமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய அரசுக்கு மேலும் ஒருமாத கால அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்கு விசாரணையை மார்ச் மாதம் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான முதன்மை அமர்வு கடந்த 16ஆம் தேதி விசாரணை செய்தது. அப்போது, சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால், மன்னார் வளைகுடாவில் உள்ள மதிப்புமிக்க இயற்கை செல்வங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். அப்பகுதியில் ஆழப்படுத்தும் பணியை மேற்கொள்ளக்கூடாது' என்று நாங்கள் உத்தரவிட்டால் திட்டமே கைவிட வேண்டிய நிலை ஏற்படும் என்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
எனவே, இத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்தும், திட்டம் நிறைவேற்றப்படும் முறை குறித்தும் மத்திய அரசு இரண்டு வாரத்தில் விளக்கமான பதில் அளிக்க வேண்டும்' என்று நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சேதுசமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மேலும் அவகாசம் கோரப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்டுள்ள உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் செய்வதற்கு மத்திய அரசுக்கு மேலும் 4 வார கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இந்த மனு மீதான விசாரணையை மார்ச் மாதம் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.