''எங்களுடைய நாட்டுப்பற்றுக்கு அத்வானி போன்றவர்களின் சான்றிதழ் தேவையில்லை'' என்று இடது சாரி கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
மத்தியில் மீண்டும் மதச்சார்புடைய சக்திகள் ஆட்சிக்கு வராத வகையில் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டப் போவதாக, பா.ஜ. கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானியின் குற்றச் சாற்றுக்கு பதிலளித்துள்ள இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்வானி தான் பிரதமராக வருவதற்கு மேற்கொள்ளும் திட்டங்களுக்கு இடது சாரிகள் தடையாக இருப்பார்கள் என்று கருதுவதால் தான் மீண்டும் மீண்டும் இடது சாரிகளைத் தாக்கிப் பேசி வருவதாக இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர். இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தின் போது, இந்திய அரசியல் கிரெம்ளின் மயமாக மாற்றப்பட்டதாகவும், இடதுசாரிகளின் கருத்துக்களை மட்டுமே இந்திராகாந்தி கேட்டு செயல்பட்டதாகவும் நேற்று பா.ஜ.க. குற்றம் சாற்றியிருந்தது.
இடதுசாரிக் கட்சிகளை தேசிய அரசியலில் முக்கிய இடத்திற்கு கொண்டு வந்ததாக கூறி காங்கிரஸ் கட்சியை அத்வானி கடுமையான விமர்சித்து இருந்தார். வேறு எந்த கட்சியும் கொடுக்காத இடத்தை இடதுசாரிகளுக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்ததாகவும், அதனால்தான் இந்திய அரசியல் கிரெம்ளின் மயமானதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இடதுசாரிக் கட்சிகளின் பங்களிப்பு குறித்தும் அத்வானி கேள்வி எழுப்பியிருந்தார்.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காத அத்வானி போன்றவர்கள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி முதலில் பேசக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஏ.பி.பரதன், ஷாமிம் பையாஷி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது போன்ற குற்றச் சாற்றுகளுக்கு இடையிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளை மக்கள் கடந்த 1952 ஆம் ஆண்டு நடைப்பெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியாக தேர்வு செய்தனர் என்பதை சுட்டிக் காட்டினார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆர்.எஸ்.பி., பார்வர்டு பிளாக் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளை காங்கிரஸ் கட்சி ஒன்றும் தூக்கிவிடவில்லை. மக்கள் தான் எங்களை தூக்கிவிட்டார்கள் என்றும், முன் எப்போதும் நிகழாத வகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் மக்கள் எங்களுக்கு 61 இடங்களைப் பெற்றுத் தந்தார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகம் தொடர்பாக கொஞ்சம் அறிவு, அத்வானி போன்றவர்களுக்கு இருக்கும் நிலையில் பா.ஜ.க. வை ஆளவேண்டாம் என்று ஆட்சியில் இருந்து தேர்தலின் போது அவர்களுக்கு எதிராக வாக்களித்த மக்களை அவமரியாதை செய்யாமல் இருக்க வேண்டும் என்றும், இடதுசாரிகளின், பா.ஜ.க. வை அகற்றுங்கள், நாட்டைப் பாதுகாக்க வாருங்கள் என்ற கோஷங்களையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று ஏ.பி.பரதன் கூறியுள்ளார்.
நாடு தழுவிய அளவிலான அனைத்துப் போராட்டங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரித்து பார்க்க முடியாத நிலையில் பணியாற்றி உள்ளதாகவும், எங்களுடைய நாட்டுப்பற்றுக்கு அத்வானி போன்றவர்களின் சான்றிதழ் தேவையில்லை என்றும் பரதன் கூறியுள்ளார்.