நமது நாட்டின் தந்தை மகாத்மா காந்தியின் 60வது நினைவுதினம் உலகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது அஸ்தியின் கடைசி பகுதியை அரபிக் கடலில் கரைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில், குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், அரசியல் தலைவர்கள் சோனியா காந்தி, அத்வானி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாளான இன்றைய தினம் (ஜன.30), தியாகிகள் நினைவு தினமாகவும் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், அலுவலங்களில் அனைத்து அலுவல்களும் நிறுத்தப்படும்.
நாடு முழுவதும் இன்று காலை 11 மணிக்கு இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்படுகிறது. சென்னை - தலைமைச் செயலகத்தில் உள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு, 11.03 மணிக்கு 'தீண்டாமை ஒழிப்பு' உறுதிமொழியை தமிழக முதல்வர் கருணாநிதி வாசிப்பார்.
முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையையொட்டி அமைந்திருக்கும் காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு, காலை 9 மணியளவில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மலர் தூவி மரியாதை செலுத்துவார். அதைத்தொடர்ந்து, பல்வேறு அரசியல் தலைவர்களும் காந்தியடிகளின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவர்.
இதற்கிடையில், நாட்டில் உள்ள முக்கிய இடங்கள், நதிகளில் காந்தியின் அஸ்தி ஏற்கனவே தூவப்பட்ட நிலையில், அவரது அஸ்தியின் கடைசி பகுதி, தெற்கு மும்பையில் உள்ள மணிபவன் கட்டிடத்தில் இருந்து அரபிக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது.
காந்தி மறைந்து 60 ஆண்டுகள் ஆனாலும், நாட்டு மக்கள் மனதில் அவரது நினைவுகள் நீங்கவில்லை என்பதற்கு உதாரணமாக, அவர் எழுதிய சத்திய சோதனை புத்தகம் ஆண்டுதோறும் 2 லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது.
இதில் ஒரு லட்சம் பிரதிகள் கேரளாவில் மட்டும் விற்கப்படுவதாக தெரிவித்த சத்திய சோதனை பதிப்பக உரிமை பெற்ற நவஜீவன் அறக்கட்டளை நிர்வாகி ஜித்தேந்திர தேசாய், கேரளாவுக்கு அடுத்ததாக தமிழகத்தில் அதிக பிரதிகள் விற்பனையாகிறது என கூறினார்.
கடந்த 1927ம் ஆண்டு குஜராத்தி மொழியில் முதன் முதலில் வெளியிடப்பட்ட சத்திய சோதனை புத்தகம், தற்போது தமிழ், அசாம், ஆங்கிலம், தெலுங்கு, ஒரியா, மலையாளம், கன்னடம், உருது, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளிலும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.