''இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் சாதகமான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இதை முடிப்பதற்குக் கால வரையறை எதுவும் இல்லை'' என்று இந்திய அணுசக்தி ஆணையத் தலைவர் அனில் ககோட்கர் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் "ஜிர்கோனியம்' திட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் வடிவம் இறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகள் தற்போது நடக்கின்றன. ஒப்பந்தத்தில் இந்தியாவுக்குத் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த நடைமுறைகள் சாதகமான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இதற்குக் கால வரையறை எதுவும் இல்லை" என்றார்.
கூடங்குளம் அணு உலைப் பணிகள் தீவிரம்!
''கூடங்குளம் அணுமின் திட்டப்பணிகள் நல்ல முறையில் நடைபெற்று வருகின்றன. அணு உலைகளை இணைக்கும் குழாய்கள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் மார்ச் அல்லது ஏப்ரலில் முடிவடையும். இதைத் தொடர்ந்து அக்டோபர் - நவம்பரில் அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணி நடைபெறும். 2009 மார்ச் அல்லது ஏப்ரலில் அணு உலையில் மின் உற்பத்தி துவங்கும். அதன்பிறகு அடுத்த 6 முதல் 8 மாதங்களில் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி துவங்கும்.
கூடங்குளத்தில் கூடுதலாக மேலும் 4 அணு உலைகள் ரஷ்ய உதவியுடன் அமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விரிவாக்கத் திட்டத்தை நிறைவேற்றுவதில் இந்திய அரசும், ரஷ்ய அரசும் மிகவும் ஆர்வமாக உள்ளன. அணு உலைக்கான எரிபொருள்களை வழங்கும் நாடுகள் குழுவில் ரஷ்யாவுக்கு உள்ள சில சர்வதேச உறுதிமொழிகளே கூடங்குளம் அணுமின் திட்ட விரிவாக்கம் தாமதமாவதற்கு காரணம். இருப்பினும், கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகளை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை நாங்கள் செய்து வருகிறோம்.'' என்றார் அனில் ககோட்கர்.