மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வாக்கு வங்கி அரசியலைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்று பா.ஜ.க. குற்றம்சாற்றி உள்ளது.
புது டெல்லியில் நடந்துவரும் பா.ஜ.க. தேசியக் கவுன்சில் கூட்டத்தில் நடந்த விவாதம் ஒன்றில், அக்கட்சியின் மூத்த தலைவர்களான அருண் ஜேட்லி, வி.கே.மல்ஹோத்ரா ஆகியோர் கூறியதாவது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பின்பற்றி வரும் கொள்கைகள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கிறிஸ்தவர்களாகவும் முஸ்லிம்களாகவும் மதம் மாறுவதற்கு ஊக்கப்படுத்துகிறது. சச்சார் ஆணையப் பரிந்துரை மக்களிடையே பிளவு மனப்பான்மையை ஏற்படுத்தி வருகிறது.
திட்டச் செலவினங்களில் 15 விழுக்காட்டை மத அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், மத அடிப்படையில் இடஒதுக்கீடு, வகுப்புவாத பட்ஜெட் முறை போன்ற செயல்திட்டங்கள் அனைத்தும் பிளவு மனப்பான்மையை அதிகரிக்கும்.
மத்திய அரசை நிர்வகிக்க திறமையான தலைவர் தேவை என்ற நிலையில், தற்போதைய பிரதமர் மன உறுதியற்றவராக இருப்பதால், அதிகாரங்கள் வேறிடத்தில் குவிந்துவிட்டது. அதிகார மையமாக செயல்படுபவர் நாடாளுமன்றத்துக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லாதவராக இருந்து வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.