ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை மேலும் பயனுள்ளதாகவும் , திறம்பட நடைமுறைப்படுத்ததக்க வகையில் திருத்தம் கொண்டு வருவதற்கான இறுதிகட்டப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் மீரா குமார் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, புதுவை, அந்தமான் நிகோபர் தீவுகள் ஆகியவற்றில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நடைமுறை குறித்தான நான்காவது கண்காணிப்புக் குழு கூட்டத்தில் மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் மீரா குமார் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இச்சட்டங்களை மேலும் பயனுள்ளதாக விரிவுப்படுத்தவும், திறனுடையதாக மாற்றுவது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் அறிக்கை கேட்டிருந்தோம், எல்லா மாநிலங்களும் அனுப்பி உள்ளதாகவும் அதனை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைச் செயல்படுத்துவதில் நாடு தழுவிய அளவில் சில இடையூறுகள் இருப்பதாக தெரிவித்த அவர், இந்த சட்டத் திருத்தம் தொடர்பாக தமது அமைச்சகம், தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தோடு இணைந்து செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இப்பணிகள் வரும் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்னதாக முடிக்க இயலாது என்றும், இச்சட்டத் திருத்தத்தை இறுதி செய்ய இன்னும் சில காலம் பிடிக்கும் என்றும் மீரா குமார் தெரிவித்துள்ளார்.
வரும் 2010-க்குள் வன்கொடுமையற்ற, தீண்டத்தகாத நிலையற்ற இந்தியாவை உருவாக்க மத்திய அரசு திட்டம் தீட்டி முனைப்புடன் செயலாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். பல்வேறு மாநிலங்களில் வன்கொடுமைக்கு எதிரான வழக்குப் பதிவு குறைந்து வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் மீரா குமார், இது உண்மை நிலையை எடுத்துக் கூறுவதாக இல்லை என்றும், பல இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க காவல் நிலையங்களுக்கு வர இயலாத நிலையும், காவல் துறையினர் மீதான அச்ச உணர்வும் தான் இதற்கு காரணம் என்றும் அமைச்சர் மீரா குமார் தெரிவித்துள்ளார்.