இளைஞர்கள் படித்தால் மட்டும் போதாது , இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் இளைஞர்கள் நாட்டைக் கட்டியெழுப்புவதிலும், நாட்டின் வெற்றிக்கும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேசிய மாணவர் படையின் 59 வது குடியரசுத் தினப் பேரணியை டெல்லியில் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், உலகில் சில நாடுகளுக்குத்தான் இளைஞர் மக்கள் தொகை என்ற வரப்பிரசாதம் கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்திய மக்கள் தொகையில் ஒவ்வொரு மூன்றாவது குடிமகனும் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞனாக இருப்பது நம் நாட்டை இளமையோடு இருக்கச் செய்துள்ளது.
இளைஞர்கள் படித்தால் மட்டும் போதாது, ஆளுமைத் தன்மையின் அனைத்து நிலைகளிலும் தங்களின் திறனைப் சோதித்துப் பார்ப்பதுடன் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான கடினமான சவால்களை எதிர்கொள்ள முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தேசிய மாணவர் படை இளைஞர்கள் மனதில் நமது குடியரசின் மதிப்பு, பண்பாடு, பன்முக கலாச்சாரத்தினை ஆழமாக பதியவைத்துள்ளது. மேலும் இது நாகரீக மிடுக்கு, மகிழ்ச்சி, குழுச் செயல்பாட்டுக்கு முன்மாதிரியாகவும் விளங்குகிறது.
நாட்டின் வளர்ச்சி நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபடுவது நாட்டின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் முக்கிய காரணியாகும். எனவே இளைஞர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு அதிக முன்னுரிமைக் கொடுத்து , கிராமப் புறங்களில் கல்வியை விரிவுப்படுத்தவும், கிராமப்புற வளர்ச்சியை உருவாக்க உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நம்பிக்கை, மனித மாண்புகளுக்கு மதிப்பளிக்கும் பொதுவான நடைமுறைக்கு உட்பட்டுள்ள நிலையை நமது இந்திய அடையாளம் வெகு பெருமையுடன் வெளிப்படுகிறது என்றும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக விளையாட்டுத் துறையிலும் இந்தியா புதிய உத்வேகத்தை அடைந்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் வளர்ச்சி, சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், நாட்டைக் கட்டி எழுப்புவதற்கும் இளைஞர்கள் எங்கெல்லாம் சிறப்பான பணியை ஆற்ற முடியுமோ, அங்கெல்லாம் தேசிய மாணவர் படை அமைதியையும், அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொருளாதாரத்தில் வளமான வளர்ச்சியைப் பெற்றுள்ளதாகவும், தற்போதைய தேவை ஒழுக்கம், வளர்ச்சிக்கான காரணிகளில் அதிக கவனம் மட்டும்தான். நம்முடைய பண்டைய கால பண்பாடும், நவீன இந்தியாவும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், அதற்கான தீர்வுகளை கண்டறிவதிலும் நம்முடைய பிரகாசமான தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் தங்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேசிய மாணவர் படை தாமாக முன்வந்து, தனது பணிகளை திறன்களுடன் திறம்பட செய்து வருவது பெருமைக்குரிய ஒன்று எனவும் பிரதமர் பாராட்டியுள்ளார். உங்களுடைய அர்பணிப்புடன் நீங்கள் மேற்கொள்ளும் பணி, இன்னும் அதிகமான மாணவர்கள் தேசிய மாணவர் படையில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற வழிவகுக்கும் என்று தாம் நம்புவதாகவும் சிங் கூறியுள்ளார்.