மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியான டைகர் மேமனின் சகோதரர் அஞ்சும் அப்துல் ரஷாக் மேமனுக்கு உச்ச நீதிமன்றம் இன்று பிணைய விடுதலை வழங்கியது.
கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், அஞ்சும் அப்துல் ரஷாக் மேமன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
தற்போது சிறையில் உள்ள அப்துல் ரஷாக், தனக்குப் பிணைய விடுதலை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான முதன்மை அமர்வு அவருக்குப் பிணைய விடுதலை வழங்கி உத்தரவிட்டது.
அப்துல் ரஷாக் சார்பில் ஆஜரான அவரின் வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, அப்துல் ரஷாக் ஏற்கனவே 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்திருப்பதால் அவரை பிணையில் விடுதலை செய்ய கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக அப்துல் ரஷாக்குக் கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் இடைக்காலப் பிணை வழங்கி உத்தரவிட்டதும், மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த தடா நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் தமக்கு வழங்கப்படவில்லை என்று கூறி அப்துல் ரஷாக் மனுத் தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.