இந்தியா - சவுதி அரேபியா இடையேயான விமான சேவையை அதிகரிக்கும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இரு வழித்தடங்களில் வாரத்திற்கு 8,500 ஆக இருந்த விமான இருக்கைகள் எண்ணிக்கை அனுமதி, உடனடியாக 20,000 இருக்கைகளாக அதிகரிக்கப்படுகிறது.
இந்த விமான இருக்கை அதிகரிப்பு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைப்பெற்ற இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் இந்திய குழுவினர் மத்திய விமானப் போக்குவரத்து துறை இணைச்செயலாளர் ஆர்.கே.சிங் தலைமையில் பங்கேற்றனர். சவுதி அரேபிய குழுவுக்கு, சவுதி அரேபிய விமானத் துறையின் துணைத் தலைவர் ஆர். பானர்ஜி தலைமை வகித்தார்.
டெல்லி, மும்பை, சென்னை, கொச்சி, ஹைதரபாத் ஆகிய நகரங்கள் தவிர கோழிக்கோடு, லக்னோ, பெங்களூரூ ஆகிய புதிய வழித்தடங்களில் சவுதி அரேபியா விமானங்களை இயக்கவும், ரியாத், ஜெட்டா, தாமம் ஆகிய வழித்தடங்களில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் இந்தியன் விமானங்கள் இனி மதினாவுக்கும் இயக்கஇந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது.
வளைகுடா நாடுகளில் உள்ள நாடுகளில், கோழிகோட்டிற்கு விமான சேவையை அளிக்கும் உரிமையை பெற்ற முதல் நாடு சவுதி அரேபியாதான். அதேப்போல மதினாவுக்கு விமானங்களை கால அட்டவணை அடிப்படையில் இயக்க அனுமதி பெற்றுள்ள நாடு இந்தியா மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா - சவுதி அரேபியா இடையேயான வழித்தடத்தில் சரக்கு போக்குவரத்துக்கு இருந்த அனைத்து தடைகளையும் நீக்க இரண்டு நாடுகளும் முடிவெடுத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை இந்திய - சவுதி அரேபிய வழித்தடத்தில் விமானங்களை கூடுதலாக இயக்க இருந்த தடைகள் புதிய ஒப்பந்தத்தின் படி அகற்றப்பட்டுள்ளது. இதனால் சவுதி அரேபியா, இந்திய விமான நிறுவனங்கள் இந்த வழித்தடத்தில் இனி கூடுதல் விமானங்களை இயக்கும் என்ற தகவல் விமானப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.