இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேத மருத்தவத்தைப் பாதுகாக்கும் வகையில் தலைநகர் டெல்லியில் ஒரு ஆராய்ச்சி அறிவியல் கழகத்தை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய அரசின் ஆயுஷ் (AYUSH) துறையின் கீழ் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தைப்(AIIMS) போன்ற அதிகாரத்துடன் செயல்பட உள்ள இந்த அகில இந்திய ஆயுர்வேதக் கல்வி நிறுவனம்(AIIA), மருத்துவ ஆராய்ச்சி, மருந்துப் பொருட்கள் பாதுகாப்பு, இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தின் அறிவியல் தன்மையைப் பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.
டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி, இத்திட்டத்திற்கான இயக்குனர் மற்றும் ஊழியர்களை நியமிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆயுர்வேதக் கல்வி நிறுவனத்திற்காக தெற்கு டெல்லியில் சரிதா விஹார் பகுதியில் உள்ள 11 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு மருத்துவ ஆராய்ச்சி வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட மருத்தவமனை அமைக்கப்படும்.
துவக்கத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகச் செயல்படவிருக்கும் இந்நிறுவனம், அடுத்த 10 ஆண்டுகளில் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்படும்.
இந்நிறுவனத்தில், அடிப்படை ஆராய்ச்சி, தர நிர்ணயம், தரக் கட்டுப்பாடு, ஆயுர்வேத மருந்துகளுக்கான அறிவியல் தகுதி நிர்ணயம் ஆகியவற்றைக் கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், முதுகலைப் பட்டயப் படிப்புகள், குறிப்பிட்ட பிரிவுகளில் முனைவர் பட்டயப் படிப்புகளும் வழங்கப்படும்.
அடிப்படை ஆராய்ச்சித் துறை, மருந்து மேம்பாடு, தர நிர்ணயம், தரக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புச் செயல்முறைகள் துறை, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் துறை, ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனை ஆகிய 4 முக்கியப் பிரிவுகள் இம்மருத்துவக் கல்வி நிறுவனத்தில் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.