Publish Date: Thu, 24 Jan 2008 (16:39 IST)
Updated Date: Thu, 24 Jan 2008 (16:39 IST)
நமது நாட்டின் எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேசிய மின்- ஆளுமைத் திட்டத்தின் கீழ் தகவல் மையங்களை அமைப்பதற்கு ரூ.1,623.20 கோடி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் புது டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேசிய மின்-ஆளுமைத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதில் ஒருபகுதியாக "மாநிலத் தகவல் மையத் திட்டம்" என்ற புதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதன்படி, நமது நாட்டில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களுக்கு இடையில் மிகுந்த நம்பிக்கைக்கு உரிய, பாதுகாப்பான வழியில் விரைவாகத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் தகவல் தொடர்பு அடிப்படைக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.
அனைத்து வசதிகளுடன் இதற்கான தகவல் மையங்களை அமைப்பதற்கு ரூ.1,623.20 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, அடுத்த 5 ஆண்டுகளுக்குத் திட்டத்தை உருவாக்கி இயக்குவதற்குத் தேவையான மொத்த செலவு என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களில் இருந்த பெறப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்த 12 மாதங்களுக்குள் தகவல் மையங்களை அமைக்கும் பணிகள் முடிந்து விடும். அதன்பிறகு செய்தித்தாள், தொலைக்காட்சி, துண்டறிக்கைகள் வாயிலாக மக்களுக்குத் தெரியப்படுத்தப்படும் என்று அமைச்சர் தாஸ்முன்ஷி கூறினார்.