குடியரசு தினவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, டெல்லியில் நடக்கும் தேசிய நாட்டுப்புற நடன விழாவை இன்று குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் துவக்கி வைக்கிறார்.
மத்திய கலாச்சார அமைச்சகம், 7 கலாச்சார மண்டல மையங்களுடன் இணைந்து தேசிய நாட்டுப்புற நடனவிழாவை இன்று முதல் இம்மாதம் 29 ஆம் தேதிவரை நடத்துகிறது.
குடியரசு தினவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த விழா புது டெல்லியில் நடக்கிறது. லோக்தரங் என்று அழைக்கப்படும் இந்த விழாவின் சின்னம் மயில் ஆகும். மத்திய கலாச்சார அமைச்சகம் ஆண்டுதோறும் இந்த விழாவை நடத்தி வருகிறது. நமது நாட்டின் செறிவுமிக்க கலாச்சார பாரம்பரியத்தை நாட்டுப்புற நடனங்களின் வாயிலாக எடுத்துரைப்பதே இந்த விழாவின் நோக்கமாகும்.
நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆடப்படும் வண்ணமிகு, துடிப்பான, தொன்மையான நடனங்களை ஒருங்கே பார்த்து ரசிக்கும் வாய்ப்பை இந்த விழா பொதுமக்களுக்கு ஏற்படுத்தித் தருகிறது. தேசிய நாட்டுப்புற நடன விழாவை குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டீல் இன்று புது டெல்லியில் துவக்கி வைக்கிறார்.
இந்த விழாவிற்கு மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனி தலைமை வகிக்கிறார். இந்த விழாவில் 28 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 42 வகை நாட்டுப்புற நடனங்கள் நடைபெறவுள்ளன. சுமார் 700 நாட்டுப்புற கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்க இருக்கின்றனர்.