வாரணாசி தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி லக்னோ விரைவு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு வாரணாசியில் நடைப்பெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர். 30-க்கும் அதிகமானோர் காயமுற்றனர். இவ்வழக்கில் மஹபூப் அலி, மொகத் பர்கான், மொகத் சாத் அலி என்ற சாத் என்ற பாபு,ரிஸ்வான் சித்திக், சையத் சோகைப் ஹசன் ஆகிய 5 பேர் மீதான குற்றச்சாற்று நீருபிக்கப்பட்டதைத் தொடர்ந்து லக்னோ விரைவு நீதிமன்ற கூடுதல் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி தர்மராஜ் மிஸ்ரா அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
பயங்கரவாதசெயல்களில் ஈடுபட்டது, ஆயுதங்கள் வைத்திருந்தது, சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட பிரிவுகளில் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டிருந்தது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 5 பேருக்கும் தலா ரூ.40,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் குண்டு வெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்டதாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள வாலி-உல்-லா மீதான வழக்கு காசியாபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட உத்திரப்பிரதேச சிறப்பு அதிரடிப் படையினர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி குற்றவாளிகளை லக்னோ - கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கைது செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சரோஜினி நகர் காவல் நிலையத்தில் மீது வழக்கு பதிவுச் செய்யப் பட்டது. பயங்கரவாதிகளிடம் கைப்பற்றப்பட்ட வரைப்படத்தில் சங்கட் மோச்சான் கோயில், இரயில் நிலையம், பாரத் மாதா மந்திர், வாரனாசி பனாரஸ் இந்து பல்கலைக் கழகம்,தாஸ்ஹஸ்வமேத் காட் ஆகிய இடங்கள் வட்டமிடப் பட்டிருந்தன.