தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்கும் விண்ணப்பங்களுக்கு ஒரே மாதிரியான விதிகளை அமைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் கோரிக்கைகளுக்கு ஒரே மாதிரியான விதிகளை அமைக்க உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி "பப்ளிக் காஸ் ரிசர்ச்' நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு வழங்கிய தீர்ப்பு விவரம் வருமாறு:
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு வெவ்வேறு விதிகளைக் கடைப்பிடிப்பதால் சட்டத்தின் நோக்கமே தோற்கடிக்கப்படும் என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. ஒரே மாதிரியான விதிகளை உருவாக்குமாறு உயர் நீதிமன்றங்களுக்கு நாங்கள் உத்தரவிட முடியாது.
விதிகளை உருவாக்குவது உயர் நீதிமன்றத்தின் தனிப்பட்ட உரிமை. உயர் நீதிமன்றத்தை மேற்பார்வையிடும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை. ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் தன்னிச்சையான அமைப்பு. உயர் நீதிமன்றங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு கீழ் செயல்படுபவை அல்ல.
உயர் நீதிமன்றம் உருவாக்கி உள்ள விதிகளை எதிர்த்து அந்த நீதிமன்றத்திலேயே வழக்குத் தொடர எல்லா உரிமையும் உண்டு. ஆனால் விதிகளை இப்படி உருவாக்கக் கூடாது, அப்படி உருவாக்கக் கூடாது என்று நாங்கள் சொல்ல முடியாது.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.