காசா எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான எரிபொருளுக்குத் தடை விதித்துள்ள இஸ்ரேலின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு விடுத்துள்ள அறிக்கையில், "பாலஸ்தீன மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காசா எல்லையில் வசிக்கும் 1.5 மில்லியன் மக்களையும் தனது காலனி ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்று இஸ்ரேல் விரும்புகிறது.
இதனால் அம்மக்களுக்குத் தேவையான எரிபொருள் வினியோகத்தை கூட இஸ்ரேல் நிறுத்திவிட்டது. இஸ்ரேலின் இந்நடவடிக்கை சர்வதேச மனிதநேய விதிகளுக்கு எதிரானதாகும்.
இவ்விடயத்தில் ஐ.நா. உடனடியாக தலையிட்டு இஸ்ரேல் விதித்துள்ள தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்பாவி மக்களின் மீது கொடுமையான தடைகளை விதித்துள்ள இஸ்ரேலின் நடவடிக்கையை, மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கண்டுகொள்ளாததைக் கண்டிக்கிறோம்" என்று கூறியுள்ளது.
மேலும், இஸ்ரேலின் உளவு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதற்கு உதவியதற்கும் மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் செலுத்தியுள்ள செயற்கைக் கோளின் மூலம் ஈரானின் நடவடிக்கைகளை கவனிக்க முடியும் என்பதால், மத்திய ஆசியப் பகுதிகளில் பதற்றம் அதிகரிக்கும் என்று அக்கட்சி கூறியுள்ளது.